Sunday, September 16, 2018

இலங்கை ஈழத்தமிழர் வரலாறு srilanka tamilan

இலங்கைத் தமிழர் வரலாறு ஒரு நாட்டின் சமூகத்தின் பண்டைய இருப்பு, பெருமை, வளம் உட்பட பல்வேறு சிறப்புகளை வெளிப்படுத்தும் ஆதாரமாயுள்ளது.

வரலாற்றை , வரலாற்றுச் சின்னங்களைப் பேணிப் பாதுகாத்து வெளிப்படுத்துவது சமூகத்தின் பொறுப்பு. அந்த வகையிலே அண்மையில் யாழ்ப்பாணத்தில் இலங்கையை ஆண்ட மூன்று தமிழ் மன்னர்களின் உருவச் சிலைகள் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டமை வரவேற்புக்குரியது, பாராட்டுதலுக்குரியது.

இவ்வாறான நற்செயலாற்றும் போது சமூகத்தின் கௌரவம் காக்கப்பட்டு உறுதிப்படுத்தப்படுகின்றது. என்றோ நிறைவேற்றியிருக்க வேண்டிய பணி தற்போது நிறைவேறியுள்ளது.

இலங்கை வரலாற்றுப் பாடத்தில் எங்குமே யாழ்ப்பாணத் தமிழரசு பற்றியோ, வன்னித் தமிழரசு பற்றியோ குறிப்பிடப்படவில்லை. எல்லாளனை ஒரு அந்நியனாக, எதிரியாகவே சித்தரிக்கப்படுகின்றது. இலங்கையின் வரலாற்று ஆசிரியர்களும், ஆய்வாளர்களும் அநுராதபுரத்துக்கு அப்பால் அதாவது அநுராதபுரத்துக்கு வடக்கேயுள்ள நிலப்பரப்பை இலங்கைக்குள் அடக்கவில்லை. அடக்கவிரும்பவில்லை என்பது வெளிப்படுகின்றது.

இலங்கைத் தீவை இலங்கையின் வரலாற்றாசிரியர்கள் பிளவுபடுத்தியே நோக்கியுள்ளனர் என்பதை இதன் மூலம் அறிய முடிகின்றது. இலங்கையை ஒரு நாடாக வரலாற்றாய்வாளர்கள் குறிப்பிட்டு யாழ்ப்பாணம் மற்றும் வன்னித் தமிழ் அரசுகள் பற்றிய வரலாற்றை வெளிப்படுத்தாமைக்கான ஏதுக்கள் தெளிவானவை.

இதனை அண்மையில் அதாவது தமிழ் மன்னர்களின் சிலைகள் திறந்து வைத்த பின்னரான ஒரு சிங்கள தொலைக்காட்சிக் கலந்துரையாடலின்போது அவதானிக்க முடிந்தது. ஆம். மனப் போக்கு வெளிப்பட்டது. இவ்வாறு சிலைகளை நிறுவுவதன் மூலம் இந்நாட்டில் தமிழ் மன்னர்கள் ஆட்சி செய்துள்ளனர். தமிழ் மக்கள் தமது மன்னர்களின் ஆளுகைக்குட்பட்டிருந்தனர் என்பதை வெளியுலகுக்குப் பகிரங்கப்படுத்துவது மட்டுமன்றி, இந்நாட்டில் வாழும் தமிழ் மக்கள் மத்தியிலே நாம் வந்தேறு குடிகளல்ல.

வாழ்ந்த குடிகள் . ஆண்ட குடிகள் என்ற மனவெழுச்சியை ஏற்படுத்துவதாகவுள்ளது. தமிழ் மக்களின் உரிமைக் கோரிக்கையை வலுப்படுத்துவதாயுமுள்ளது என்று குறித்த கலந்துரையாடலில் ஆதங்கம் வெளிப்படுத்தப்பட்டது. இவ்வாறான நிலையிலே தமிழ் மக்கள் தமது உரிமையை உறுதிப்படுத்தும் சான்றாதாரமாக வரலாற்றை நோக்க வேண்டும். பெறுமதியை உணர வேண்டும்.

யாழ்ப்பாணத் தமிழரசினதும், வன்னித் தமிழரசினதும் பண்டைய பெருமை, வரலாறு , வீரம், அந்நியருக்கு அடங்காமை போன்றவை ஆதாரபூர்வமாக வெளிப்பட வழிகாண வேண்டும். பதிவு செய்யப்பட வேண்டும். நீதி நெறி தவறாது நாற்பத்து நான்கு ஆண்டுகள் அநுராதபுரத்தில் ஆட்சி செய்த எல்லாளனுக்கு யாழ்ப்பாணத்தில் சிலை அமைப்பதற்குப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே எல்லாள மாமன்னனுடன் போரிட்ட துட்டகைமுனு, உலகிலேயே மிகப் பெரிய சமாதியை எல்லாளன் நினைவாலயமாக அமைத்து அதற்கு மரியாதை செலுத்தப் பணித்தமையும் பின்னாளில் இலங்கையின் தொல்பொருளாய்வாளர் என்று கூறப்பட்ட செனரத் பரணவிதான என்பவர் இனவாத நோக்கில் அது எல்லாளன் சமாதி அல்ல "தக்ண தூப' என்ற கட்டிடமே என்று கூறி துட்டகைமுனு மன்னனின் ஆணையை அலட்சியப்படுத்தியமையும் வரலாற்றுப் பதிவாக அமைகின்றன.

எல்லாளனின் வரலாறு இல்லாவிட்டால் துட்டகைமுனுவைத் தூக்கிப் பிடிக்க வேண்டிய தேவையும் இருந்திருக்காது. எது எவ்வாறாயினும் எல்லாளனின் நினைவை மீட்டும் போது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இலங்கை நிலப்பரப்பில் நிலவிய தமிழர் ஆட்சி வெளிப்படுகின்றது.

தமிழர்களின் பண்டைய இருப்பு உறுதிப்படுத்தப்படுகின்றது. எல்லாளனின் பெயர் சிலையினடியில் தவறாக "எல்லாளன்' என்று குறிப்பிடப்பட்டுள்ளமை திருத்தம் செய்யப்பட வேண்டும் . அது விரைவில் இடம்பெறுமென்று எதிர்பார்க்கலாம். ஏற்கனவே நல்லூர் முத்திரைச் சந்தியில் யாழ்ப்பாணத்தின் கடைசித் தமிழ் வேந்தன் ஆங்கிலேயரை எதிர்த்து அடி பணியாது இறுதிவரை போரிட்ட சங்கிலியனுக்கு சிலை நிறுவப்பட்டுள்ளது.

இலங்கையின் தமிழரின் பண்டைய இருப்பை ஆதார பூர்வமாக வெளிப்படுத்த கிழக்கிலங்கையின் மண்முனை தமிழரசின் அரசியான "உலக நாச்சியாரின் சிலையையும் கண்டியின் கடைசி அரசன் ஸ்ரீ விக்கிரமராசசிங்கன் என்ற கண்ணுச் சாமியின் சிலையையும் நிறுவி தமிழரின் பண்டைய ஆளுமையை வெளிப்படுத்துவது சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் அமையும்.

மட்டக்களப்பிலிருந்த மண்முனை தமிழரசி (கி.பி. 3 ஆம் நூற்றாண்டு ) யின் சிலையை அண்மையில் இன வன் சிந்தனையாளர்கள் சிதைத்தழித்தமை பதிவாகியுள்ளது. கிழக்கிலங்கையில் தமிழர்களின் பண்டைய இருப்பைப் பறைசாற்றும் உலக நாச்சியாரைத் தமிழ் ஆர்வலர்கள் நினைவிற் கொள்ள வேண்டும்.

நாட்டின் ஒருமைப்பாடு, சமூகங்களிடையே புரிந்துணர்வு, இணக்கப்பாடு ஏற்பட உண்மை வரலாறு வெளிப்படுத்தப்பட வேண்டும். இலங்கையில் என்ன நடக்கின்றது. தமிழர்கள் வந்தேறுகுடிகள், அந்நியர், ஆக்கிரமிப்பாளர்கள் என்ற சிந்தனையை வலுவூட்டி, உரப்படுத்தும் நோக்கிலான வரலாற்றுப் பாடங்களே தயாரிக்கப்பட்டுள்ளன.

பிள்ளைகளின் மனதிலே பதியப்படுத்தப்படுகின்றன. வளரும் பிள்ளைகள் மனதிலே தமிழருக்கு எதிரான இன வெறிச் சிந்தனை ஊட்டப்படுவதன் பிரதிபலிப்பே அண்மையில் கம்பஹாவில் இடம்பெற்ற கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியில் அம்பாந்தோட்டையைச் சேர்ந்த சிங்கள இளைஞர்கள் யாழ்ப்பாணத்து விளையாட்டு வீரர்களைத் தாக்கிக் கீழ்த் தரமாக நடக்கும் நிலைக்கான ஏதுவாயமைந்தது.

இலங்கையில், பெரும்பான்மையின அரசியல் வாதிகள் சமூக, பொருளாதார, கலாசார பாரம்பரியங்களை மேம்படுத்துவோம் என்று கூறி மக்களிடம் வாக்கு கேட்பதை விட தாம் தமிழருக்கு எதிரானவர்கள். தமிழருக்கு உரிமைகள் வழங்க மாட்டோம். வழங்கவும் விடமாட்டோம் என்று கூறியே வாக்குகளைப் பெறும் இழிந்த அரசியலை நடத்துகின்றனர். தமிழருக்கு உரிமை வழங்க மாட்டோம் வழங்குவதைத் தடுப்போம் என்ற கொள்கையுடன் இலங்கையின் தமிழரல்லாத ஏனைய சமூகங்களின் அரசியல் செயற்பாடுள்ளது. வரலாறு அதைத் தெளிவாகவே பதிவேற்றியுள்ளது. உலகிலே வரலாற்றாதாரங்கள் பேணப்படுவது பெறுமதிமிக்க மரபாகவுள்ளது. தமிழர்கள் குறிப்பாக இலங்கைத் தமிழர்கள் அதைப் பின்பற்றாதவர்களாக ,பெறுமதியை உணராதவர்களாகவேயுள்ளனர்.

தாம் இந் நாட்டின் அந்நியரென்று எண்ணுகின்றனர். இற்றைக்கு இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் இலங்கைக்குள் விஜயன் அடியெடுத்து வைக்கும் முன்னர் புத்த சமயமோ, வேறெந்த சமயமோ புகுமுன் , சிங்கள மொழி கருக்கட்டாத காலத்தில் தீவின் நாலாபக்கங்களிலும் ஐந்து சிவாலயங்கள் சிறப்புடன் இருந்தமையை மகாவம்சம் போன்ற நூல்களும் சேர். போல் ஈ. பீரிஸ் போன்ற வரலாற்றாய்வாளர்களும் உறுதிப்படுத்தி வெளிப்படத்தியுள்ளனர்.

 நகுலேஸ்வரம், கோணேஸ்வரம், கேதீஸ்வரம், முன்னேஸ்வரம், தொண்டேஸ்வரம் ஆகியவையே விஜயன் வருகையின் போது சிறப்புடன் இருந்த ஐந்து சிவாலயங்கள். இவற்றையே முறையாக ஆராயும் ஆற்றல் அற்றவர்களாக நம் மத்தியிலேயுள்ள வரலாற்றாய்வாளர்கள் உள்ளமை அவர்களது தகைமையில் சந்தேகத்தையேற்படுத்துகின்றது.

இது இவ்வாறிருக்க யாழ்ப்பாணத் தமிழ் அரசின் ஏஞ்சிய சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டியதன் தேவை உணரப்பட வேண்டும். சங்கிலியன் தோப்பு, மந்திரிமனை, யமுனா ஏரி என்பன பாதுகாக்கப்பட வேண்டும்.பண்டைய வரலாற்று சான்றுகளைப் பேணிப் பாதுகாக்கும் நோக்கில் நாட்டின் பல இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தொல்பொருள் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுகின்றது.

பௌத்த சமய தொன்மை இருப்பைப் பாதுகாப்பதற்காக அநுராதபுரம் , தம்புள்ள, கண்டி, மகியங்கனை போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளவற்றையும் பலாங்கொடை ஜெயிலானி என்று அண்மைக் காலமாக முஸ்லிம்களின் புனித வழிபாட்டிடமாயிருந்த இடம் பண்டைய பௌத்த வழிபாட்டிடம் என்று கூறப்பட்டு முஸ்லிம்களின் கட்டிடங்கள் அகற்றப்பட்டமையும் வரலாற்றைப் பேண அரசாங்கம் மேற்கொள்ளும் செயற்பாடுகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் . இந் நாட்டின் பௌத்த , சிங்கள இருப்பின் வரலாறு பேணப்பட்டு உறுதிப்படுத்தப்படவுள்ள உரிமை இந்து, தமிழர்களின் பண்டைய இருப்பை, சிறப்பை வெளிப்படுத்த உறுதிப்படுத்த உள்ளது. இது மறுக்கப்பட முடியாத உரிமையாகும்.

யாழ்ப்பாண அரசு பல சிறப்பம்சங்களைக் கொண்டது. இலங்கைத் தீவிலே பிரித்தானியர் ஆட்சிக்குப் பின்பே தங்குமிடத்துடன் கூடிய வைத்தியசாலைகள் ஏற்படுத்தப்பட்டன என்று கொள்ளப்படுகின்றன. ஆனால் யாழ்ப்பாண அரசின் நிர்வாகத்தின் கீழ் யாழ். நாயன்மார் கட்டு என்ற இடத்தில் வைத்தியசாலையொன்று செயற்பட்டுள்ளது.

பரந்த நிலப்பரப்பில் இயங்கிய குறித்த வைத்தியசாலையில் இந்துக் குருமார் தங்கி மருத்துவம் செய்ய தனிப்பிரிவும் அதேபோல் காயமடைந்த போர் வீரர்களுக்கான தனிப் பிரிவும் இருந்துள்ளன. காயமடைந்த போர் வீரர்களுக்கு மருத்துவம் செய்த பாரம்பரியத்தின் காரணமாகவே முறிவு தறிவு வைத்தியம் என்று அவ் வைத்தியசாலை பெயர் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாண அரசு வைத்தியத்துறையில் சிறப்புற்று செயற்பட்டமைக்கு இவ் வைத்தியசாலை இன்றும் சான்றாகவுள்ளது. அதேபோல் யாழ். அரச மாளிகையைச் சூழ நாற்புரமுமமைந்துள்ள நல்லூர் கந்தசுவாமி கோயில், சட்டநாதர் சிவன் கோயில், வீரமாகாளியம்மன் கோயில், வெயிலுகந்த பிள்ளையார் கோயில் என்பன யாழ்ப்பாண இராச்சியத்தில் இந்து சமயம் பெற்றிருந்த மேன்மைக்கு எடுத்துக் காட்டுகளாயுள்ளன. இலங்கைத் தீவில் தமிழர்களின், இந்துக்களின் பண்டைய இருப்பைப் பறைசாற்றி நிற்கும் வரலாற்றாதாரங்கள், தொல்பொருட் சுவடிகள் பாதுகாக்கப்பட வேண்டும். பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்.

ஒரு இனத்தின் இருப்பை வரலாற்று ரீதியாக உறுதிப்படுத்த, வெளிப்படுத்த ஏற்ற தடயங்களைப் பாதுகாப்பது சமூகப் பொறுப்பு. சமூகப் பொறுப்பை நிறைவேற்ற அரசியல், தனிப்பட்ட கொள்கைகள் எதுவும் தடையாக அமையக் கூடாது. ஒருபுறம் தமிழ், இந்து மக்களின் பண்டைய வரலாறு மறைக்கப்படும் செயற்பாடு நிலவுதுடன் தமிழர், இந்துக்கள் தரப்போ சமூகத்தின் பண்டைய இருப்பை ,பெருமையை, வளத்தை ஆய்வு செய்யும் ஆர்வமோ, ஆற்றலோ அற்றதாக விளங்குவது கவலைக்குரியதாயுள்ளது.

எது எவ்வாறாயினும் இலங்கையின் கல்விக் கொள்கைக்கமைய வரலாறு ஒரு கட்டாய பாடமாகவுள்ளது. ஆனால் குறைபாடுடையதாக ஒரு சமூகத்தின், தமிழ் சமூகத்தின் வரலாற்றை மறைத்ததாகவே வரலாற்றுப் பாடத் திட்டம் தயாரித்து பாடசாலைகளில் கற்பிக்கப்பட்டு வருகின்றது.

குறுகிய நோக்குடன் தயாரிக்கப்பட்டுள்ள வரலாற்றுப் பாடம் முழுமை பொருந்திய வரலாறு அல்ல. கல்வியியலாளர்கள் அரசியல்வாதிகளைப் போன்று வரலாற்றை மறைப்பதானது அவர்களது அறிவு ஞானத்தை, ஆய்வின் தரத்தை பங்கப்படுத்துவதாயுள்ளது. வரலாறு வரலாறாகவே பதியப்பட்டு வெளிப்படுத்தப்பட வேண்டும் . 


செய்தித் தொகுப்பு - lanka7

No comments:

Post a Comment